சனி, 3 ஜனவரி, 2015

நினைவலைகளில் கலைமாமணிதிருச்சிபாரதன்

நினைவலைகளில் கலைமாமணிதிருச்சிபாரதன்
                      கவிஞர் முனைவர் மா.தாமோதரகண்ணன்
                                                 அலைபேசி-9442663637
          திருச்சிமாவட்டம் பாலக்கரை எடத்தெருவில் 30-09-1934 ஆம் ஆண்டு கோ.இரங்கசாமி-காமாட்சிஅம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.இயற்பெயர் தங்கவேலன்.பள்ளிப் பருவத்திலேயே இலக்கியங்கள் படைக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.இவரின் முதல் படைப்பு 1946-இல் பாலர்மலரில் வெளியானது.12 வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். இவ்விதழுக்கு இவரைப்போல இன்னொரு மாணவரே உறுதுணையாக நின்றார்.அவர்தான் இன்றைய புகழ் பெற்ற நாவல் ஆசிரியர் நாதன் என்னும் ஐ.சண்முகநாதன் ஆவார்.
            தங்கவேலன் என்பர் திருச்சிபாரதன் ஆனது எப்படியெனில் இரத்தக்கண்ணீர் படத்தில் ‘‘ குற்றம் புரிந்தவன்….” ராஜராஜன் படத்தில் ‘‘ நிலவோடுவான் முகில்….” மங்கையர்க்கரசி படத்தில் ‘‘ காதல் கனிரசமே…” பாடல் உள்ளிட்ட காலத்தால் அழியாத பலபாடல்கள் இயற்றிய கு.சா.கி. என்று அன்புடன் அழைக்கப்பட்ட கு.சா.கிருஷ்ணமூர்த்தி மீதுள்ள ஈடுபாடினால் தன்னுடைய எழுத்துலகின் மானசீகக் குருவாக கவிஞர் கு.சா.கி.  யை ஏற்றுக் கொண்டார். அவர் எழுதும் படைப்புகளை எல்லாம் கு.சா.கி.தாசன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.குருவும் சீடரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புப் பாராட்டினார்கள்.பின்னொரு நாளில் கு.சா.கி. யை நேரில் சந்தித்தார். ‘‘ யாரும் யாருக்கும் தாசனாக வேண்டாம் ” என்று அன்புக் கட்டளையிட்டு கு.சா.கி. அவர்களே ‘‘ திருச்சி பாரதன் ” எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.அன்று முதல் நகமும் சதையுமாகவே நட்பாடினார்கள்.  திருச்சி பாரதன் எனும் பெயரிலேயே குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், நாடகங்கள், முருகப்பக்திப்பாடல்கள், தமிழிசைப்பாடல்கள் பல படைத்தார். மேலும் மேல்நாட்டு மருமகள், கந்தர்அலங்காரம், தோடிராகம், ராகபந்தங்கள் ஆகிய சில திரைப்படங்களில் ஒவ்வொரு பாடல் எழுதிப் புகழ் பெற்று கலைமாமணி பட்டமும் வென்று தமிழ்இலக்கியவரலாற்றில் தனக்கெனத் தனிஇடம் பெற்றார்.
           அந்தக்காலத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் திருச்சி வெல்லமண்டியில் சில மாதங்கள் கணக்கராகப் பணிபுரிந்தார் பின்னர் ஆருயிர் நண்பர் ஐ.சண்முகநாதன் வேண்டுகோளின் பேரில்  தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் காலத்திலேயே தினந்தந்தி செய்தி ஆசிரியர் பணிக்குச்சென்றார். தினந்தந்தியில் பணியாற்றுபவர்கள் அவ்வளவு எளிதில் மற்ற கலைத்துறையில் ஈடுபட முடியாதபடி கட்டுப்பாடுகள் நிறைய உண்டு.இதையெல்லாம் கடந்து சி.பா.ஆதித்தனாரின் அன்பும் அறிவுரையும் பெற்று சிறப்பு அனுமதியுடன் கலைத்துறையில் கால்பதித்துச் சாதனைகள் பல புரியத்துவங்கினார். கவிஞர் எழுதிய ‘‘ பலாப்பழம் ’’ நாடக அரங்கேற்றத்திற்கு  சி.பா.ஆதித்தனார் தலைமையேற்று ‘‘கலைத்துறை வாயிலாகவும் தமிழ் அருமையை உணர்த்தவேண்டும் என்று கூறும் பாரதிதாசனின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இந்நாடகம் உள்ளது ’’ என்றும் பாராட்டியுள்ளார். ஏற்றுக்கொண்ட செய்தி ஆசிரியர் பணியில் 32 ஆண்டுகள் தினந்தந்தியில் திறம்பட பணியாற்றி பின்னாளில் விருப்ப ஓய்வுப்பெற்றார்.
           1965 ஆம் ஆண்டு திருச்சிபாரதன் எழுதிய ‘‘ அப்பாவின் ஆசை ’’ நாடகம் டி.கே.சண்முகம் கலைக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றிகரமாக வலம் வந்தது. இது குழந்தை களுக்கான நாடகம்.இந்தியாவிலேயே முதல்முதலில் தொழில்முறையில் குழந்தைகளுக்கான நாடகம் அரங்கேற்றிய பெருமை டி.கே.சண்முகம் கலைக்குழுவினருக்கு உண்டு.அதே போல இந்தியாவிலேயே முதல்முதலில் தொழில்முறையில் குழந்தைகளுக்கான நாடகம் எழுதிய பெருமை திருச்சிபாரதனுக்கு உண்டு. பேரறிஞர்அண்ணா இந்நாடகத்தை நேரில் கண்டு புகழ்ந்துரைத்துள்ளார்.இந்நாடகத்தில் ‘‘ உழைத்துப் பிழைக்க வேண்டும்….’’என்னும் பாடல் ஒரு காட்சியில் அம்புலி பாடி பதிவு செய்யப்பட்டது ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பாகும்.முக்கிய கதைப்பாத்திரம் ஏற்று நடிக்கும் ஒரு சிறுவன் வாயசைத்து நடிப்பது வழக்கம். ஒருநாள் ஒலிநாடா அறுந்து விட்டது  சிறுவனோ சமயோசிதமாக பின்னாலிருந்து இசைக்கப்படும் இசைக்குழுவினரின் இசைக்கேற்ப பாடி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்.அன்று முதல் அச்சிறுவன் மேடையில் பாடும் நடிகராகவும் பெயர் பெற்றார். ‘‘ அப்பாவின் ஆசை ’’ நாடகம் வாயிலாகப் பாடல் பயிற்சிப்பெற்ற அந்தச் சிறுவனே இன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரம் பத்மஸ்ரீ கமலஹாசன் ஆவார்.
           இவருடைய மைல்கல் படைப்புகளில் ஒன்றான ‘‘ கந்தன் காவியம் ’’ நாட்டியநாடகம் 700 முறைக்குமேல் அரங்கேறி யுள்ளது.இந்நாடகத்தின் 100 வது அரங்கேற்றத்திற்கும் 500 வது அரங்கேற்றத்திற்கும் தலைமை தாங்கிய பெருமை நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு உண்டு. மேலும் அவரே, ‘‘ ஆயிரம்முறை பார்த்தாலும்  கந்தன் காவியம்  நாட்டியநாடகம் அலுக்காது ’’ என்றும் புகழ்ந்துரைத்துள்ளார்.
 
              திருச்சிபாரதனின் இலக்கியப் பணியைப் பெருபாலும் வளர்த்த இதழ்களில் முதன்மைஇடம் பெறுவது புரட்சிக்கவிஞரின் ‘‘ குயில் ’’ இதழின் தொடர்ச்சியாக விளங்கும் கலைமாமணி பொன்னடியாரின் பொன்விழா காணும் ‘‘ முல்லைச்சரம் ’’ இதழ் ஆகும்.இவ்விதழில் வெளியிடப்பட்ட திருச்சிபாரதனின் படைப்புகளைத்தொகுத்தால் அது பெரியநூல் எனப்பெயர் பெறும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவாக்கிய சென்னைத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினாரகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
                   திருச்சிபாரதன் தமிழ்இலக்கியத்தில் காலத்திற்கேற்ப  புதுமைகளைச் செய்ய வேண்டும் என்பதில் தனியாத ஆர்வம் உடையவர்.     சிவனுக்கு திருவெம்பாவை, திருமாலுக்கு திருப்பாவை போல முருகனுக்காக ‘‘முருகுப்பாவை ” என்னும் நூலையும் சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு போல முருகனுக்காக ‘‘குகநானூறு ” ,‘‘சுகநானூறு ” ஆகிய இருநூல்களையும் நீதி நூலான இன்னாநாற்பது போல ‘‘தமிழ்நாற்பது” நூலையும் எழுதினார். திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றி திருக்குறள் இசைப்பாடல் நூலையும் அருணகிரிநாதர் போல முருகன் மீது 1340 இசைப்பாடல்கள் கொண்ட ‘‘குகன் கீதாஞ்சலி ” நூலையும் எழுதிவெளியிட்டார்.
             ஒரே நாள் இரவில் 100 விதமான இராகங்களில் பிழையின்றி அடித்தல் திருத்தமின்றி இசையமைப்பாளர் நெல்லை ஆர்.சுப்பிரமணியத்திற்குப் பாடல்கள் தந்தார்.
                    திருச்சிபாரதன் பாடல்களை மட்டுமே பாடக் கூடிய முழுஇசைக்சேரிகள் 180 க்கும் மேல்நடந்துள்ளன.பெரும்பாலான முழுஇசைக்சேரிகளைப் பாடியவர்கள் திருபுவனம் ஜி.ஆத்மநாதன் ,சீாகாழி கோவிந்தராஜன் ஆவார்கள்.
                    இவருடைய பல படைப்புகளைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு ஏற்றுக்கொண்டன.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘‘ குகநானூறு ” நூலைச் சிறந்த நூலாக அறிவித்து 5000 ரூபாய் பரிசு வழங்கியது.
          திருச்சி வானொலி அங்கிகரித்த 12 கவிஞர்களில் திருச்சியில் பாரதனும் ஒருவர் என்ற புகழும் உண்டு.
        இவர் எழுதிய நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய அறிஞர் பெருமக்கள் எண்ணிக்கையில் நூறுக்கும் மேல் உள்ளார்கள்.
        தமிழகஅரசின் கரும்பலகைத்திட்டத்தின் கீழ் கவிஞர்  எழுதிய ‘‘ பூந்தோட்டம் ’’ நூலினை 6000 பிரதிகள் வாங்கிக்கொண்டார்கள்.    குழந்தைகள், சமூகம், கவிதை, இசை, நாட்டியம், நகைச்சுவை, தத்துவம்,வரலாறு,மேடைநாடகம் என ஒன்பது வகையான தமிழ் நாடகங்களையும் 2500 க்கும் மேற்பட்ட தமிழிசைப்பாடல்களையும் கலைஉலகிற்குப் படைத்தளித்தார்.

        கலைமாமாணி உட்பட 12 க்கும் மேற்பட்ட விருதுகளும் பல்வேறு அமைப்புகளின் பாராட்டும் பெற்றவர்.  திருவையாறு தமிழிசை மன்றத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் துணைத்தலைவராகவும் இருந்து மன்றத்திற்குப் புகழ்சேர்த்தார்.
          பெரியவர்பக்தவச்சலம், பேரறிஞர்அண்ணா ,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். போன்ற முதல்வர்களிடம் பாராட்டுப்பெற்றவர்.
          75 வயதில் அவர் மறைந்தார்(26-11-2008) அப்பொழுது அவர் எழுதிய  நூல்கள் எண்ணிக்கையும் 75 ஆக இருந்தது.

           முத்தமிழ்ச்சேவையில் 65 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து சாதனைகள் பல செய்தவர் கலைமாமாணி கவிஞர்திலகம் திருச்சிபாரதன் நூல்களை நாட்டுடைமையாக்கியும் அவர் வாழ்ந்த வீட்டினை நினைவு இல்லமாக்கியும் அவர் நடைபயின்ற வீதிக்கு அவர்பெயரையும் அவர் பெயரில் நூலகமும் ஞான பீட விருதும் திருச்சியில் பாரதன்மணிமண்டபமும் அஞ்சல்தலை வெளியிட்டும் திருச்சியிலும் சென்னையிலும் சிலை அமைத்து அவர் புகழ் பாடிடவேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக